தஞ்சாவூரில்
தொடங்கப்பட்டுள்ள ஏடகம் என்ற அமைப்பின் ஞாயிறு முற்றம் தொடர் சொற்பொழிவின் இரண்டாவது
நிகழ்ச்சி 12.11.2017 மாலை தெற்கு வீதி ஜவுளி செட்டித்தெரு விநாயகர் கோயில்
வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் தஞ்சை நகர மனவளக்கலை மன்ற அறக்கட்டளைச் செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டமானது பல்வேறு துறை சார்ந்த அறிஞர் பெருமக்களைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து செயல்படும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களிடையே கல்வி சார்ந்த சமூகம் சார்ந்த சிந்தனைகளை விதைக்கும் வகையில் ஒரு பொது அமைப்பாக திரு மணி.மாறன் மற்றும் அவர்களுடைய நண்பர்களால் தொடங்கப்பட்டுள்ளது. முதன்மை நோக்கமாக சுவடியியல், கல்வெட்டியல், செப்பேடு, கிரந்தம் போன்ற பண்டைய எழுத்துக்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதைச் செய்துவருகின்றது.
இந்த அமைப்பின் ஒரு பிரிவாக ஞாயிறு முற்றம் சொற்பொழிவில் இன்று தமிழகமும் தண்ணீரும் என்ற தலைப்பில் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் ஒளி ஒலி காட்சியுடன் உரை நிகழ்த்தினார். அவருடைய உரையில் சங்க நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியவற்றில் காணப்படும் நீர் மேலாண்மை குறித்த செய்திகளையும் அவற்றுள் ஏரி, குளங்களை உருவாக்கி அவற்றைப் பாதுகாத்து பராமரிப்பு செய்த செய்திகளையும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை தொழில்நுட்பங்களையும் இந்த நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் உள்ளது என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
இந்த தொடர் சொற்பொழிவின் ஓர் அங்கமாக, ஒவ்வொரு மாதமும், சமூகத்திற்குத் தொண்டாற்றக்கூடிய சிறந்த மனிதர்களைத் தேடி அவர்களுக்குச் சிறப்பு செய்தல் என்ற நிலையில் ஆயிரக்கணக்கான பனை விதைகளை நட்டு, மிகப் பெரும் சமுதாயப் பாதுகாப்பு செய்து வருகின்ற பாலமுருகன், ஜெயபாலன், இராமமூர்த்தி ஆகிய ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
முன்னதாக வை.இராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். ஏடகத்தின் பொருளாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார். திரளானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
2 Comments
ஞாயிறு முற்றத்தின் நவம்பர் பொழிவுப் பகிர்வு கண்டேன். வாழ்த்துகள்
ReplyDeleteஅருமையான நிகழ்வு
ReplyDeleteஅருமையான சொற்பொழிவு ஐயா
பழந்தமிழரின் நீர் மேலாண்மை பற்றி அறிந்து வியந்தேன் ஐயா
நன்றி