ஏடகம் துவக்க விழா : 8 அக்டோபர் 2017


ஏடகத்தின் துவக்க விழா தஞ்சாவூர் தெற்கு வீதி ஜவுளி செட்டித்தெரு விநாயகர் கோயில் வளாகத்தில் 8 அக்டோபர் 2017 அன்று மாலை 6.01 மணியளவில் துவங்கியது.



முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் குத்துவிளக்கேற்றி ஏடகத்தின் அலுவலகத்தினையும், செயல்பாடுகளையும் தொடங்கிவைத்தார். 





ஏடு+அகம் =  ஏடு - ஓலைச்சுவடி, அகம் - தங்கிய இடம் ஏடகம். ஏடுகள் நிறைந்த, அதாவது நூல்கள் தங்கியுள்ள இடம். ஏடகம் என்ற அழகு தமிழ்ச்சொல்லில் திருவேடகம் என்னும் ஓர் ஊர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமைந்துள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள ஏடகநாதேஸ்வரர் திருக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். ஞானசம்பந்தர் பாடிய ஏடானது வைகையாற்றின் வெள்ளத்தை எதிர்த்து கரையை அடைந்த பெருமையுடையது இவ்வூர். இதன் காரணமாகவே ஏடுகளைப் பாதுகாத்துப் போற்றி பதிப்பிக்கும் பெரும் பணியாற்றவுள்ள இவ்வமைக்கு ஏடகம் என்று பெயர் சூட்டியுள்ளோம். 

ஏடகம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் :
  • சுவடிகளைப் படித்தறியும் பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குதல்
  • கிரந்த எழுத்துச் சுவடிகளைப் படித்தறியும் பயிற்சி வழங்குதல்
  • எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதும் பயிற்சி வழங்குதல்
  • சுவடிகளைப் படி எடுத்து பாதுகாத்தல்
  • இந்தியாவிலுள்ள சுவடியின் நகல்களைப் பெற முயற்சி மேற்கொள்ளல்
  • உலக நாடுகளிலுள்ள தமிழ்ச்சுவடிகளின் நகல்களைப் பெறல்
  • சுவடிகளிடையே ஒப்பாய்வு செய்தல்
  • அரிய மருத்துவ, கணித சுவடிகளை நூலாக்கம் செய்து வெளியிடல்
  • பிறமொழி (கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி) எழுத்துகளில் காணப்படும் தமிழ்ச்சுவடிகளின் படிகளைப் பெற்று பாதுகாத்து ஆய்வு மேற்கொள்ளல்
  • தமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், கலையியல் சார்ந்த நூல்களை வெளியிடல்
  • ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஏடகத்தின் துணை அமைப்பான ஞாயிறு முற்றம் வழியாக  பல்துறை சார்ந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்துதல் 







நன்றி : தினமணி, 9 அக்டோபர் 2017

நன்றி : தினத்தந்தி, 9 அக்டோபர் 2017


நன்றி : திரு ஜெயப்பிரகாஷ் 

நன்றி : திரு கரந்தை ஜெயக்குமார்
மேற்கொண்ட பணிகளை செய்யவிருக்கும் ஏடகம் அமைப்பின் ஞாயிறு முற்றம் முதல் சொற்பொழிவு வரலாற்றுப்பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் "காவிரியுடன் ஒரு பயணம்" என்ற தலைப்பில் ஒளி ஒலிக்காட்சியுடன் நிகழ்த்தப்பெற்றது. பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் (தலைவர், பணி நிறைவு, வணிகவியல் துறை, திரு புட்பம் கல்லூரி)  தலைமையுரையாற்ற ஆடிட்டர் திரு டி.என்.ஜெயகுமார், திரு சி.அப்பாண்டைராஜ், திரு எம்.வேம்பையன், முனைவர் ஜம்புலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திரு பி.கணேசன் நன்றியுரையாற்றினார். முன்னதாக ஏடகத்தின் நிறுவனர் திரு மணி.மாறன் வரவேற்புரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான அறிஞர் பெருமக்களும், மாணவர்களும், பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

ஞாயிறு முற்றத்தின் இரண்டாவது சொற்பொழிவு 12 நவம்பர் 2017 மாலை 6.01 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.



Post a Comment

3 Comments

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. தமிழக சுவடியியல், இலக்கிய, வரலாற்றுத் துறைகளில் ஏடகம் சாதனை புரிய மனம் நிறைந்த வாழ்த்துகள்

    ReplyDelete