தஞ்சையில் சமணம் : வெளியீட்டு விழா: 29 ஜுன் 2018

ஏடகத்தின் முதல் வெளியீடான முனைவர் பா.ஜம்புலிங்கம், மணி.மாறன், தில்லை.கோவிந்தராஜன் எழுதிய  தஞ்சையில் சமணம் நூலின் வெளியீட்டு விழா 29 ஜுன் 2018 மாலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. முனைவர் பா.ஜம்புலிங்கம் வரவேற்புரையில் அனைவரையும் வரவேற்ற பின்னர், அவருடைய பௌத்த ஆய்வு தொடர்பாக  1993 முதல் மேற்கொண்ட வந்த களப்பணியின்போது புத்தர் சிலைகளுடன் சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

விருந்தினர்களுக்கு ஏடகம் சிறப்பு செய்ததைத் தொடர்ந்து மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி ஜைன மடத்தைச் சேர்ந்த சர்வ ஜினாலய பரிபாலகர் ஸ்வஸ்திஸ்ரீஇலட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய ஸ்வாமிகள் நூலை வெளியிட்டார். சமண அன்பர்களும், நண்பர்களும், அறிஞர் பெருமக்களும் நூலின் படியை ஸ்வாமிகளிடமிருந்து பெற்றுக்கொண்டனர். 
திரு மணி.மாறன், முனைவர் பா.ஜம்புலிங்கம், முனைவர் அ.இலட்சுமிதத்தை, ஸ்வஸ்திஸ்ரீஇலட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய ஸ்வாமிகள்,  திரு ச.அப்பாண்டைராஜ், திரு இரா.செழியன், திரு தில்லை கோவிந்தராஜன்


தஞ்சாவூர் வெற்றித் தமிழர் பேரவையின் மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு இரா.செழியன் தன்னுடைய வாழ்த்துரையில் களப்பணி அடிப்படையில் வெளிவரும் இந்நூலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.  ஆய்வுலகிற்குப் பெருமை சேர்க்கின்ற இந்நூல் தஞ்சையிலிருந்து வெளிவருவது சிறப்பானது என்று கூறினார். 

புதுச்சேரி புதுவைப் பல்கலைக்கழக சமுதாயக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அ.இலட்சுமிதத்தை சமண சமயத்தின் பெருமையையும், தஞ்சையின் பெருமையையும் எடுத்துரைக்கின்ற இந்நூல் பல முதன்மை ஆதாரங்களைக் கொண்டுள்ளதாகக் கூறினார். நூலில் தலைப்புகளை அமைத்துள்ள முறை சிறப்பாக உள்ளது என்றும், வில் என்பதைப் பற்றிய விளக்கம் தனி தலைப்பில் தரப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் இதுபோன்ற பல முக்கிய கூறுகள் நூலில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார். 


ஸ்வஸ்திஸ்ரீஇலட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய ஸ்வாமிகள் தன்னுடைய சிறப்புரையில் இலக்கியங்களின் வழி பங்களிப்பு என்ற நிலையில் சமணம் முதல் இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு, சமண நெறிகள் எக்காலத்திற்கும் பொருந்துவன என்று கூறினார். தற்காலச் சமுதாயம், குறிப்பாக இளைஞர்கள் நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபட வேண்டும் என்றும் அப்போதுதான் சமுதாயம் உயரிய நிலைக்குச் செல்லும் என்றும் கூறினார். நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறிய அவர் நூலாசிரியர்கள் நூல் வெளிவர எடுத்துக்கொண்ட முயற்சியைப் பாராட்டினார். ஸ்வாமிகள் நூலாசிரியர்களைப் பாராட்டி மாலையணிவித்து ஆசி வழங்கினார். 


தஞ்சாவூர் தஞ்சை ஜினாலய அறங்காவலர் திரு .அப்பாண்டைராஜ் தமிழகத்தில் பிற பகுதிகளில் சமணம் தொடர்பான நூல்கள் வந்துள்ள நிலையில் தஞ்சையில் சமணம் என்ற நூல் வராமல் இருந்த குறையை இந்நூல் போக்கியுள்ளது என்று கூறினார்.

பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு கோ.தில்லை கோவிந்தராஜன் நன்றியுரையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, ஒவ்வொரு சமண சிலைகளைத் தேடப்போகும்போது எதிர்கொண்ட  சிரமங்களை எடுத்துரைத்ததோடு, களப்பணியில் துணை நின்ற பெருமக்களை நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப்பண்டிதர் திரு மணி.மாறன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தன் தொகுப்புரையில் ஏடகம் மேற்கொண்டுவருகின்ற பணிகளை எடுத்துரைத்து, அதன் ஒரு கூறாக நூல் வெளியீடு அமையும் என்றும், அவ்வகையில் இந்நூல் முதல் நூலாக வெளிவருவது சிறப்பானது என்றும் கூறினார். நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவேறியது.
தஞ்சை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவும், சமண வரலாற்றுக்கு முக்கிய பங்களிப்பாகவும்  அமைந்துள்ள இந்நூல் விழா நாளன்று ரூ.90க்கு விற்கப்பட்டது. விருந்தினர்களும், பொதுமக்களும், சமண அன்பவர்களும் ஆர்வத்துடன் நூல்களை வாங்கிச் சென்றனர்.
 
நூல் வெளியீட்டு செய்தியை வெளியிட்ட இதழ்களுக்கு மனமார்ந்த நன்றியை ஏடகம் தெரிவித்துக்கொள்கிறது. 
நன்றி : தினமணி
நன்றி : புதுகை வரலாறு

நன்றி : நன்றி வின் டிவி

Post a Comment

1 Comments

  1. ஏடகம் வெளியிடும் முதல் நூலின் ஆசிரியர்களில் ஒருவர் என்ற நிலையில் பெருமையடைகிறேன். விழா சிறப்பாக அமைய உதவிய அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete