கப்பலேறிய யானை
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க வேண்டும்
காரைவனம் என்னும் மாநகரில் பிறந்தப் புனிதவதியார் பாடிய, தேவாரப் பாடல் இது.
காரைவனம்
இன்றைய காரைக்கால்
புனிதவதியார்
காரைக்கால் அம்மையார்
மனித உரு நீங்கி, பேயுரு பெற்ற, காரைக்கால் அம்மையார், என்றென்றும் சிவனின் காலடியில் இருக்க விரும்பி, வரம் கேட்க, இறைவனும் அருளியதாக உரைக்கின்றன, நம் இலக்கியங்கள்.
தமிழகத்துச் சிவன் கோயில்களின் கோபுரங்களில், சிவபெருமானின் காலடியில், பாடலைப் பாடியவாறு அமர்ந்திருக்கும், காரைக்கால் அம்மையார் அவர்களின் உருவினை இன்றும் காணலாம்.
தமிழகத்துக் கோயில்களில் மட்டுமே இக்காட்சியினைக் காணலாம்.
ஆந்திரா, கர்நாடகா, கேளரக் கோயில்களிலோ அல்லது வடநாட்டுக் கோயில்களிலோ, இக்காட்சியினைக் காண இயலாது.
தமிழகத்தின் எல்லை தாண்டாத, இந்தக் காரைக்கால் அம்மையாரின் திருஉருவக் காட்சி, கடல் தாண்டி, அயலகக் கோயில்களில், கம்பீரமாகக் காட்சி தருகிறது என்று சொன்னால் நம்புவீர்களா?
உண்மை, நம்பித்தான் ஆக வேண்டும்
பனாம் ரங்
பனாம் ரங் என்னுமிடத்தில், மலை மீது, நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது ஒரு கோயில்.
ஸ்ரீ கைலாசம்
ஆம், கோயிலின் பெயரே, ஸ்ரீ கைலாசம்தான்
பனாம் ரங்
தாய்லாந்தின் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கும், பூரிராம் மாநிலத்தின் எழில்மிகு சிற்றூர் பனாம் ரங்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கெமர அரசர்களால் கட்டப்பெற்ற கோயில் இது.
இராஜேந்திர சோழனுக்கு அடி பணிந்து, ஆட்சி நடத்திய கேமர அரசர்கள் இவர்கள்.
காஞ்சிபுரத்துச் சிற்பிகள், தமிழகத்தில் இருந்து கடல் கடந்து சென்று, இக்கோயிலை எடுப்பிக்க உதவியதாகப் பறை சாற்றுகிறது, இக்கோயிலின் கல்வெட்டு.
ஆனால், அறுபது வருடங்களுக்கு முன்னர், இக்கோயில் கோபுரத்தில் இருந்து, காரைக்கால் அம்மையார் காணாமல் போய்விட்டதுதான் வேதனை.
யாரோ சிலர், இவரது உருவத்தைப் பெயர்த்தெடுத்து, விற்று விட்டனர்.
ஆயினும், இந்த இடத்தில் இருந்தது, காரைக்கால் அம்மையார் சிலைதான் என்பதைச் சுட்டுகிறது, இக்கோயிலின் அறிவிப்புப் பலகை.
----
இக்கோயிலின் மையப் பகுதியில் இறைவன்.
இம் மையப் பகுதியை நோக்கி, நான்கு திசைகளில் இருந்தும் வழிகள்.
செக்கர் ஒளி பவள ஒளி மின்னும் ஜோதி என்று பாடும் அப்பரின் வரிகளுக்கு, உயிர் கொடுத்திருக்கிறார்கள், நம் காஞ்சிபுரத்துச் சிற்பிகள்.
ஏப்ரல் 13
ஒவ்வோராண்டும் ஏப்ரல் 13 ஆம் நாள் அன்று மட்டும், மிகச் சரியாக, சூரிய உதயத்தின் போதும், சூரிய மறைவின் போதும், சூரியக் கதிர்கள், இக்கோயிலின் வாசல்கள் வழி நுழைந்து, இறைவனைத் தங்களின் ஒளியால் குளிப்பாட்டுகின்றன.
காலை, மாலை மட்டுமல்ல, நாள் முழுவதும், கோயிலின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள, 15 துவாரங்கள் வழியாக, சூரியக் கதிர்கள், மாறி மாறி நுழைந்து, சிவனைத் தழுவுமாறு வடிவமைத்திருக்கிறார்கள்.
வியப்பாக இருக்கிறதல்லவா.
---
வேறொரு அதிசயமும் இக்கோயிலில் உண்டு
இரண்டு நூலகங்கள்
ஆம், இக்கோயிலில் இரண்டு நூலகங்கள் இருக்கின்றன
இந்த நூலகங்களைக் கடந்து சென்றால்தான் இறைவனையே பார்க்க முடியும்.
கோயிலில் நூலகங்கள்
தாய்லாந்தில் உள்ள கோயில்கள் அனைத்திலும் நூலகங்கள் உண்டு
படி, படி என நம்மைப் படிக்கச் சொல்லும் கோயில்கள் இவை
இப்பகுதி பௌத்தர்களால் நிரம்பி வழியும் பகுதி
திருப்பாவை, திருவம்பாவைப் பாடல்களைப் பாடுகிறார்கள்
மதம் கடந்த நேசம்
---
அறிவியல் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் இக்காலத்தில் கூட, இதுபோன்ற ஒரு கோயிலைக் கட்டவேண்டுமானால், 300 ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள்.
ஆனால், தொழில் நுட்ப வசதி சிறிதும் இல்லாத, அக்காலத்தில், நம் தமிழர்கள், நாற்பதே ஆண்டுகளில் சாதித்திருக்கிறார்கள்.
அதிநவீனத் தொழில் நுட்பம் வாய்ந்த, இன்றைய, எந்தவொரு புகைப்படக் கருவி மூலமாகவும், இக்கோயிலை, முழுமையாக, முழுவதுமாகப் படம் பிடிப்பது என்பது இயலாத காரியம்.
வானூர்தி ஏறி, மேலே, மேலே பறந்து போய், பருந்துப் பார்வையில் வேண்டுமானால் படம் பிடிக்கலாம்.
பெரிதினும் பெரிது கேள் என்பர் நம் முன்னோர்
பெரிதினும் பெரிதாய் கட்டப் பெற்றக் கோயில் இது
கோயிலின் ஒரு பக்கச் சுவரின் நீளம் மட்டும் 3.6 கிமீ
துளியும் பிசகாத சதுர அமைப்பு
ஒவ்வொரு பக்கமும் 3.6 கிமீ
அங்கோர்வாட் ஆலயம்
கம்போடியா
கோயியிலன் உட்சுவர் முழுவதும் கல்லில் புடைப்புச் சிற்பங்கள்
கோயிலை முழுமையாகப் பார்ப்பதற்கே பல நாட்கள் ஆகும்
தமிழகத்துக் கோயில்களில் நாம் காணும், வாலி வதை படலம், அச்சு அசலாய், இங்கு இருக்கிறது.
பிற்காலத்தில், மெல்ல, மெல்ல பௌத்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்ட கோயில் இது.
கம்போடியா
பௌத்த தேசம்
கம்போடியாவின் தேசியக் கொடியில், பட்டொளி வீசிப் பறப்பதும், இந்த அங்கோர்வாட் ஆலயம்தான்.
---
பேங்காக், தாய்லாந்து
புத்தர் கோயில்
அமர்ந்த கோலத்தில் புத்தர்
இச்சிலையின் அகலம் 11 அடி, உயரம் 13 அடி
இதன் எடை என்ன தெரியுமா?
5.5 டன்
அதாவது 5,500 கிகி
13 அல்லது 14 ஆம் நூற்றாண்டில் செய்யப்பெற்ற சிலை
இச்சிலையினை ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கலாம்
பின் தேவைப்படும் பொழுது, இணைத்துக் கொள்ளலாம்.
இச்சிலை முழுவதும் தங்கம், தங்கம்
ஆம் முழுவதுமே தங்கத்தால் செய்யப்பெற்ற சிலை.
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று சொன்ன புத்தருக்கு, ஆசை ஆசையாய் பொனனால் சிலை வடித்திருக்கிறார்கள்
இச்சிலை செய்யப்பட்டது எங்கு தெரியுமா?
தமிழகத்தில்
நாகப் பட்டிணத்தில்
ஆம், அறிவியல் வளராத அக்காலத்தில், துல்லியமாய் கணக்கிட்டு, ஒன்பது பகுதிகளாய் சிலையினைச் செய்து, கப்பலில் ஏற்றி தாய்லாந்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.
---
சங்ககாலம் தொட்டே, கடல் கடந்து வணிகம் செய்தவர்கள், நம் முன்னோர்கள்.
அக்கால வணிகர்களுக்கு, தர்ம வணிகர்கள் என்று பெயர்
வணிகம் செய்தல், பொருள் சேர்த்தல் மட்டுமே இவர்களது இலக்கு அல்ல.
அதனையும் தாண்டி, அம்மக்களோடு மக்களாய் உறவாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
எந்நாடு சென்றாலும், அந்நாட்டு மக்களின் இன்னல் போக்க உதவி இருக்கிறார்கள்.
தாய்லாந்தின் ஒரு பகுதி
சிற்றூர்
தக்குவாயாவின் நிரந்தரப் பற்றாக்குறை தண்ணீர்
தண்ணீர் பற்றாக் குறையினைப் போக்க, அப்பகுதி மக்களின் தாகம் தணிக்க, நம் வணிகர்கள், இன்று நேற்றல்ல, இன்றைக்கு ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கும் முன், தக்குவாயா கிராமத்திற்காக, ஒரு பெரும் குளத்தினை வெட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆயிரத்து நூறு ஆண்டுகள் கடந்தும், தப்பிப் பிழைத்தக் கல்வெட்டு ஒன்று, இன்று உரத்து முழங்குகிறது இச்செய்தியை.
நாங்கூர் உடையார் தொட்ட குளம்
பூம்புகாரின், நாங்கூர் பகுதியினைச் சேர்ந்த வணிகர்கள், சேனா முத்தார், மணி கிராமத்தார் வெட்டுவித்த நாங்கூர் உடையார் தொட்ட குளம், அதாவது, வெட்டுவித்த குளம்.
அயலக மக்களின் தாகம் தணிக்க உதவியத் தமிழன், இன்று, தன் தாகம் தீர்க்க வழியின்றித் தவிப்பது வேதனையல்லவா.
இதுமட்டுமல்ல, தாய்லாந்தின் அகழாய்வில் கிடைத்த மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த உரைக் கல்லில், தலை நிமிர்ந்து நிற்கின்றன, தமிழ் எழுத்துக்கள்.
உரைக் கல்
பெரும்பலன் கல்
தமிழ் எழுத்துக்கள்
அங்கு இங்கு எனாதபடி எங்கும் தமிழர்கள்.
---
சங்கிராம வினையோத்துங்க வர்ம
னாகிய கடாரத்தரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியோடு மகப்படுத்
துரிமையிற் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்
விச்சாசிரத்தோ ரணமு மொய்த் தொளிர்
புனைமணிப் புதவமூங் கணமணிக் கதவமும்..
மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி வன்மரான
உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்
என்று முழங்குகிறது, முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பாடல்.
இராஜேந்திர சோழன்
தஞ்சைப் பெரியக் கோயிலை எழுப்பிய, இராஜராஜனின் வீரப் புதல்வன்.
இராஜராஜனின் மறைவிற்குப் பின், பத்தாண்டுகள், தஞ்சையினையே, தலைநகராகக் கொண்டு மாட்சிமை தாங்கிய ஆட்சி செலுத்திய மாமன்னன்.
தஞ்சைப் பெரிய கோயிலில் இன்று நாம் காணும், கல்வெட்டுக்களில் பெருமபாலானவை, இந்த இராஜேந்திர சோழனால் வெட்டப் பட்டவை.
ஆயிரம் ஆண்டகளுக்கும் முன், உலகிலேயே, கப்பற் படையை வைத்திருந்த ஒரே மன்னன், மாமன்னன் இராஜேந்திர சோழன்தான்.
கீழ்த்திசை நாடுகள் அனைத்தையும் கைப் பற்றிய, வென்றெடுத்த ஒரே மன்னனும் இராஜேந்திர சோழன்தான்.
கடாரம் - மலேயோவின் மேற்கரையிலுள்ள கெடா
சீர்விசயம் - ஸ்ரீ விஜயம்(சுமத்ராவிலுள்ள பாலம்பாங் என்னும் ராஜ்ஜியம்)
பண்ணை - சுமத்ரா தீவின் கீழ்க்கரையிலுள்ள ஊர்
மலையூர் - மலேயா அல்லது சுமத்ரா தீவின் பகுதி
இலங்கா சோகம் – மலேயாவிலுள்ள கெடாவிற்கும் தெற்கே உள்ள ஊர்
மாயிருடிங்கம் – மலேயாவின் நடுவில் உள்ளது
பப்பாளம் - கிரா எனும் பூசந்திக்கு அருகில் இருக்க வேண்டும்
தக்கோலம் - தகோபா (மலோயா)
இலம்பங்கம் – தகோபா (மலேயா)
வளைப்பந்தூர் – தகோபா (மலேயா)
இலாமூரி தேசம் – வட சுமத்ரா
நக்கவாரம் - நிக்கோபார் தீவு
தமாலிங்கம் – மலோயயில் உள்ள தெமலிங் நகரம்
என 13 இடங்களை இராஜேந்திரன் கைப் பற்றினான்.
கைப்பற்றியது, ஆட்சி அமைப்பதற்காக அல்ல
எல்லையை விரிவுபடுத்துவதற்காக அல்ல
தமிழக வணிகர்களை, கடற் கொள்ளையர்களிடமிருந்து காப்பதற்காக
கீழ்த் திசை நாடுகளில், தமிழக வணிகர்கள், நிம்மதியாக வணிகம் செய்வதற்காக
கடாரம் கொண்டான்
கடாரத்தை வென்ற இராஜேந்திரன், கடார தேசத்தின் பட்டத்து யாணையை, பெரும் செல்வத்தை, தோரண வாயிலை, மணிகள் புனையப்பெற்ற நிலைக் கால்களை, மணிக் கதவினை தஞ்சைக்குக் கொண்டுவந்தான்.
பட்டத்து யானையைக் கப்பலில் ஏற்றித் தஞ்சைக்குக் கொண்டு வந்திருக்கிறான்.
அநேகமாக, முதன் முதலில், கப்பலில் ஏறிப் பயணித்த யானை, கடாரத்து யாணையாகத்தான் இருக்கும்.
யானை கப்பலில் பயணிக்கிறதென்றால், கப்பல் எத்துணை பெரிதாக, எத்துணை வலிமையானதாக இருந்திருக்க வேண்டும்
கற்பனை செய்து பாருங்கள்.
---
சுமார் இரண்டு மணி நேரம், கால இயந்திரத்தில் ஏறி, வெகுவேகமாய் பின்னோக்கிப் பயணித்து, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து, சோழர கால பூமியில், காலடி பதித்த ஓர் உணர்வு.
கீழ்த்திசை நாடுகள் அனைத்தையும், வானில் பறந்து, பறந்து, நேரில் கண்ட உற்சாகம்.
கீழ்த்திசை நாடுகளில் தமிழகக் கலைத்தாக்கம்
ஒளிப்படக் காட்சிகளுடன் கூடிய உணர்ச்சிமிகு பொழிவு
குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள்
பேசச் பேச, அனைவரும் மெய்மறந்துதான் அமர்ந்திருந்தோம்.
ஏடுகளைப் புரட்டி, ஆய்வு செய்பவரல்ல இவர்
களமிறங்கி ஆய்வு செய்பவர்
இராஜேந்திர சோழன் வென்ற இந்தியப் பகுதிகள் மற்றும் கீழ்த்திசை நாடுகள் அனைத்திற்கும் பயணித்து, பல்லாண்டுகள் ஆய்வு செய்தவர் இவர்.
கீழ்த்திசை நாடுகளில் தமிழகக் கலைத்தாக்கம்
ஏடகம்
ஏடகம் அமைப்பின், இரண்டாமாண்டுத் தொடக்க விழா,
இவரது செம்மாந்த உரையால் களை கட்டித்தான் போனது
பல்லாண்டு கால உழைப்பின் பயனை
பல்லாண்டு கால ஆய்வின் பலனை
முழுவதுமாய் இறக்கி வைத்தார்.
தன் அயரா உழைப்பால்,
தஞ்சை மக்களின் மனதில் நீங்கா இடத்தினைப் பிடித்திருக்கும்,
திரு மணி.மாறன் அவர்கள்
விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார்.
திரு எம்.ராஜா அவர்கள்
தலைமையுரையாற்ற,
திரு கே.சுரேஷ்
எஸ்.எம் ,ஜுவல்லரி உரிமையாளர்
திரு எஸ்.முரளிதரன்
உமா ஆர்ட்ஸ் உரிமையாளர்
திரு உ.செந்தில் குமார்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பா.விஜி அவர்கள்
நன்றியுரையாற்ற விழா இனிது நிறைவுற்றது.
திருமதி கோ.ஜெயலட்சுமி அவர்கள்
விழா நிகழ்வுகளைத் திறம்படத் தொகுத்து வழங்கினார்.
ஒவ்வொரு பொழிவும், தமிழர்தம் தொன்மையைத் தோண்டி எடுத்து,
நல் விருந்து படைக்கும் பொழிவு.
நாம் யார், நம் முன்னோர் எத்தகையவர்கள் என்பதை,
நமக்கே, நல் அறிமுகம் செய்யும் அற்புதப் பொழிவுகள்.
பணி சிறக்க வாழ்த்துவோம்.
நன்றி : கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ
0 Comments