யான் வாழும் நாளும் ….
இன்று, நேற்றல்ல
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
அரசன் ஒருவரும், அமைச்சர் ஒருவரும் குதிரையேறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
காவிரிக் கரை வழி பயணம் தொடர்கிறது.
கிழான்
சிற்றூர்
கிழான் என்னும் சிற்றூரை இருவரும் நெருங்குகையில், பலர் எதிர்படுகின்றனர்.
கையில் உணவும், பொருளும் ஏந்தி மகிழ்வோடு, தங்கள் துன்பம் துறந்து எதிர்படுகின்றனர்.
அரசருக்கு ஒன்றும் புரியவில்லை
வறியவர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் வள்ளல் இங்கு யார் இருக்கிறார்? என்று அமைச்சரை நோக்கிக் கேட்கின்றான்.
சிறுகுடி கிழான் பண்ணன்
பசித்த வயிற்றிற்கு இல்லை என்று கூறாது, அன்னமிட்டுப் போற்றும் மாமனிதர் ஒருவர் இங்கு இருக்கிறார்.
அரசனுக்கு உடனே, இப்பண்ணனைக் கண்டாக வேண்டும் என்னும் ஆவல் எழுகிறது.
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எனக்கே.
என்னவொரு அழகானச் சொல்லாடல் பார்த்தீர்களா
உடல் நோயைப் போக்குபவன் மட்டும் மருத்துவனல்ல,
பசி என்னும் கொடு நோயை விரட்டுபவனும் மருத்துவனே
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எனக்கே
பசிப்பிணி மருத்துவன் வீடு அருகிலா? தொலைவிலா? அவரைப் பார்க்க வேண்டும் எனக் கேட்கிறான்.
கேட்கும் பொழுதே, இப் பசிப்பிணி மருத்துவருக்குப் பெரும் பரிசு வழங்க வேண்டும் என்னும் ஆவலும், அரசன் உள்ளத்தில் உதித்தெழுகிறது.
எதை வழங்கலாம்?
ஒரு கிராமத்தை வழங்கலாமா?
ஒரு நகரத்தை வழங்கலாமா?
பொன்னையும், பொருளையும் வாரி வாரி வழங்கலாமா?
யோசிக்கிறான்.
இவற்றையெல்லாம் விடப் பெரிதாக வழங்க வேண்டும்
யோசித்தவன், முகம் மலர்ந்து அறிவிக்கிறான்.
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
என் வாழ்நாளை, என் ஆயுளை பண்ணனுக்கு வழங்குகின்றேன்.
பண்ணன் நெடுங்காலம் வாழட்டும்
பண்ணன் தொண்டு தொடரட்டும்
பொன்னை, பொருளை வழங்காது, பண்ணனுக்குத் தன் வாழ்நாளை அன்பளிப்பாய் வழங்க முன் வந்த இந்த அரசன் யார் தெரியுமா-
---
மன்னராட்சி
மன்னராட்சி முறை என்ன என்பதை நாம் நன்கு அறிவோம்.
ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆள்வான்
அவனுக்குப் பின், அவன் மகன் ஆள்வான்
அவனுக்கும் பின், அவன் மகன் ஆள்வான்
இன்றைய குடியாட்சியிலும் இதுதானே நடக்கிறது.
இது சரியா?
வாரிசுகள்தான் நாட்டை ஆள வேண்டுமா?
ஒரு நாள், சான்றோர் சூழ, வீற்றிருந்த மன்னன், அரசு முறையின் இயல்பு பற்றிப் பேசுகையில், தன் கருத்தைத் தெள்ளத் தெளிவாய் முன் வைத்தான்.
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால் தர பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு எனக்
குடிபுரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்
சிறியோன் பெறின். அது சிறந்தன்று மன்னே
மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்
அறு கயமருங்கின் சிறு கோல் வெண்கிடை
என்றூழ் வாடு வறல் போல, நன்றும்
ஆட்சி என்பது மூத்தவர் மறைந்தபின், அவர்தம் வாரிசு தொடர்வது.
இதில் பெருமைப் படத்தக்கது எதுவும் இல்லை
ஆட்சி யார் கைக்கு வருகிறது என்பதைப் பொறுத்துதான், ஆட்சியின் சிறப்பு அமைகிறது.
மக்களிடம் வரிப் பணம் பெற்று, உண்டு, தின்று, கொழுத்து வாழ்வான் எனில், அதனால் பயனேது.
மக்களுக்கு நல்லாட்சியும், எதிரிகளை நேரில் சந்தித்துப் போர் புரிந்து, அழிக்கும் ஆற்றலும் வீரமும், நேர்மையும், உண்மையும் உடையவனே ஆட்சியில் அமர வேண்டும்.
முயற்சி உடையவன், பயிற்சி பெற்றவன், பிறர் துன்பம் உணர்ந்தவனே அரியணையில் அமர வேண்டும் என்கிறான்.
இத்திறமை அற்றவனை, கொஞ்சமும் தாமதியாமல் ஆண்மைச் சிறியோன் என்கிறான்.
ஆண்மைச் சிறியோன்
ஆண்மை அற்றவன்.
நண்பர்களே, ஆட்சிக் கட்டிலில் ஏறி, அமர்ந்தபிறகும், நல்லாட்சி வழங்க இயலா மன்னனை, ஆண்மைச் சிறியோர் என அழைத்த இம்மன்னன் யார் தெரியுமா?
---
தாமப்பல் கண்ணனார்
அந்தணர்,
புலவர்
ஒரு நாள், அரசனோடு, வட்டாட்டம் விளையாடினார்
வட்டாட்டத்தின்போது, வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு, காய்களை கையில் மறைத்து, மன்னனை ஏமாற்றி விடுகிறார்.
ஆனால் கைகளில் காய்களை மறைத்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்த மன்னன், தான் உருட்டி விளையாடிய, காய்களால், அப்புலவரை அடித்து விடுகிறான்.
கோபத்தில் அடித்துவிட்ட மன்னனை, அவன் உள்ளம், அடுத்த நொடியே, வேதனையால் வாட்டுகிறது.
விளையாட்டில், விளையாட்டாய் ஏமாற்றியப் புலவரை அடித்துவிட்டோமே என எண்ணி நாணினான், கூனிக் குறுகினான்.
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக்குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என
பிழை செய்தது நான், ஆனால் நீ பிழை செய்தது போல் நாணுகிறாயே. தமக்குப் பிழை செய்தாரைப் பொறுத்துக் கொள்ளுதல் உன் உயர் குடியில் எளிது போலும் எனப் பலவாறு போற்றிப் பாடினார், புலவர்.
நண்பர்களே, ஏமாற்றியப் புலவரை அடித்துவிட்டு, தான் குற்றம் செய்துவிட்டதைப் போல், நாணிய, இம்மன்னன் யார் தெரியுமா?
---
இவர் ஒரு மன்னன் மகள்.
உறவுக்காரர்கள் பலர், இவரைப் பெண் கேட்டபோதும், இவர் மனமோ வேறு ஒருவனை நாடியது.
நீச்சல் நடன விளையாட்டு வீரனான, இவர்தம் காதலன், ஒருமுறை காவிரியில் குதித்து, விளையாடும் பொழுது, காணாமல் போய்விடுகிறான்.
காவிரி ஆற்று வெள்ளம் இவனை இழுத்துச் சென்று விடுகிறது
இவளோ, தன் காதலனைத் தேடி, கரையோரமாய் ஓடுகிறாள், தேடுகிறாள்.
என் காதலனைக் கண்டீரோ எனக் கேட்டு ஊர் ஊராக அலைகிறாள்.
பலம் கொண்ட வீரர்கள் தம்முள் மோதி விளையாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர், தம்முள் பொழுது போக்காக, தழுவி வட்டமாக நின்று, கை கோர்த்துக் கொண்டு, நுணங்கை நடனம் ஆடும் இடங்களிலும் தேடுகிறாள்.
மள்ளர் குழிஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்
கோடு ஈர் இலங்க வளை நெகிழ்த்த
பீடு கொழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே
குறுந்தொகையின் 31 ஆம் பாடலாக இவர் பாடிய பாடலாக, இப்பாடல் ஒன்று மட்டுமே, இன்று நமக்குக் கிடைத்திருக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுககு முன்னரே, கல்வியில் சிறந்து, கவிபாடும் வல்லமை படைத்த, பெண்பாற் புலவரான, இந்த மன்னனின் மகள் யார் தெரியுமா?
---
பசிப்பிணி மருத்துவருக்குத் தன் ஆயுளை வழங்கிய மன்னனும், திறமையில்லாதவரை ஆண்மைச் சிறியோன் என இகழ்ந்த மன்னனும், அந்தணரை அடித்ததற்காக நாணிய மன்னனும், அண்ணன் தம்பிகள் என்றால் நம்புவீர்களா?
உண்மை
நம்பித்தான் ஆக வேண்டும்
இதுமட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே. குறுந்தொகைச் செய்யுள் ஒன்றைப் பாடியுள்ளாரே, ஒரு பெண்பாற் புலவர், இவர், இந்தப் பெண்பாற் புலவர், இம்மன்னர் மூவருக்கும் தமக்கை என்றால் நம்புவீர்களா?
உண்மை
இவர், இம்மூவருக்கும் தமக்கை.
வியப்பாக இருக்கிறதல்லவா?
இத்தகு பெருமை வாய்ந்த, மக்கள் நால்வரைத் தன் பிள்ளைகளாய்ப் பெற்றெடுத்த, அந்தப் பெரு மன்னன், மாமன்னன் யார் தெரியுமா?
இவர்தம் ஆட்சி காலத்தில், தெருக்களில் எல்லாம், சோறு வடித்த கொழு கஞ்சி, ஆற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது.
இத்தெருக்களின் வழி, விரைந்தோடும், தேர்களின் சக்கரங்கள், கஞ்சியாற்றைக் கடந்து செல்லும் பொழுது, கஞ்சியானது மெல்ல மேலெழுந்து, பறந்து, வானுயர்ந்த மாட மாளிகைகள், கோயில்களின், வெளிச் சுவற்றில் படிந்து படிந்து, இக்கட்டிடங்கள் புகை படிந்தது போல் காட்சியளிக்கின்றதாம்.
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பறந்து ஒழுகி
ஏறு போலச் சேறாகி
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறுபட்ட வினை ஒவத்து
வெண்கோயில் மாசு ஊட்டும்
கற்பனை செய்து பார்ப்பதற்கே வியப்பாக இருக்கிறதல்லவா?
இத்தகு பெருமை வாய்ந்த மன்னன் யார் தெரியுமா?
எப்படிக் கட்டினான் என்பதே எனக்குப் புரியவில்லை என, ஆங்கிலேயப் பொறியாளர் புலம்பினான் அல்லவா?
அந்த ஆங்கிலப் பொறியாளர் மட்டுமல்ல, உலகே வியந்து போற்றும்படியான, அணையினை, கல்லணையினை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுப்பிய மன்னன் இவன்.
இவன் பிள்ளைகள்தான், நாம், முன்னர் பார்த்த நால்வரும்.
யான் வாழும் காலம் பண்ணன் வாழியவே
என வாழ்த்தியவன்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளி வளவன்
திறனற்றவர்களை ஆண்மைச் சிறியோர்
என இகழ்ந்தவன்
சோழன் நலங்கிள்ளி
புலவர் பிழை செய்தபோது, தானே பிழை செய்தது போல் நாணியவன்
சோழன் மாவளத்தான்
தன் காதலனைத் தேடி, காவிரிக் கரையோரம் ஓடியவள்
சோழன் கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான்
மூவரின் அன்புத் தமக்கை
ஆதி மந்தி.
---
நண்பர்களே, கடந்த 9.11.2018 ஞாயிறன்று நடைபெற்ற,
ஏடகம்
அமைப்பின்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவில், கரிகாலனின் மக்கள் நால்வர் பற்றியச் செய்திகளை அறிந்து, வியந்து, மயங்கி அமர்ந்திருந்தேன்.
மடை திறந்த வெள்ளம்போல் ஆர்ப்பரித்து வழிந்த சொற்கள்.
பொழிவை வழங்கியவர், தமிழறிஞராகவே வாழ்ந்துவரும், காக்கி சட்டைக்குச் சொந்தக்காரர்.
பணிநிறைவு பெற்ற, காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர்
மீசை சூழ்ந்த முகம்
மீசைக்கார நண்பர், பாசத்திற்குரிய
தேவகோட்டை கில்லர்ஜியைப் பார்த்தது போன்ற ஓர் உணர்வு
கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற
திரு எம்.வேம்பையன் அவர்கள்
வரவேற்றார்
மருத்துவர் ஏ.சீனிவாசன் அவர்கள்
தலைமையுரையாற்றினார்
திரு க.முரளி அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.
திருமதி சி.வசந்தி அவர்கள்
விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
---
ஏடகம்
ஞாயிறு முற்றம்
ஏடக நிறுவுநர்
திரு மணி.மாறன் அவர்களின்
அயரா, தளரா முயற்சியால்,
ஏடகம்
தன் முதலாண்டினை நிறைவு செய்து
இரண்டாம் ஆண்டில் தடம் பதித்துள்ளது.
ஏடகம் அமைப்பின்
பணி தொடர,
திரு மணி.மாறன் அவர்களின்
தமிழ்த் தொண்டு தொடர
வாழ்த்துவோம், போற்றுவோம்.
நன்றி : திரு கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ
0 Comments