ஞாயிறு முற்றம் ஆகஸ்டு 2019

பிரிவினை




     பா கி ஸ் தா ன்

     பிரிவினை என்றாலே நம் மனதில் நிழலாடும் பெயர், பாகிஸ்தான்.

     பா கி ஸ் தா ன்

     இந்தப் பெயர் எப்படி உருவாக்கப் பட்டது தெரியுமா?


     இந்தப் பெயரை உருவாக்கியவர் யார் தெரியுமா?

     ரஹமத் அலி

     1933 இல் இப்பெயரை ஒவ்வொரு எழுத்தாய் கோர்த்து உருவாக்கினார்.

     P A K I S T A N

     P என்றால் பஞ்சாப்

     A என்றால் ஆஃப்கானிஸ்தான்

     K என்றால் காஷ்மீர்

     S என்றால் சிந்து

     TAN என்றால் பலுசிஸ்தானின் கடைசி மூன்று எழுத்துக்கள்

     I உச்சரிப்பிற்காக இடையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது

     P A K I S T A N

     பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து ஏன் பிரிந்தது?

     யார் பிரித்தது?

     ஜின்னா

     முகமது அலி ஜின்னா

    

      ஜின்னா?

     பிரிவினை வாதியா? தேசியவாதியா?

     காங்கிரஸில் காந்தியைவிட மூத்தவர் ஜின்னா

     காந்தி இந்தியாவிற்கு வந்தது 1915

     ஜின்னா காங்கிரஸில் சேர்ந்தது 1906.

     1906 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் கட்சி உதயமாகிறது.

     ஆனால் ஜின்னா முஸ்லிம் லீக்கில் சேரவில்லை, காங்கிரஸில் இணைந்தார்.

     மத்திய சட்ட மன்ற உறுப்பினராய் 1919 இல் ரௌலட் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் ஜின்னா.

      குரல் மட்டுமா கொடுத்தார்

     தன் மத்திய சட்டமன்ற உறுப்பினர் பதவியையே துச்சமாய் மதித்துத் தூக்கி எறிந்தவர் ஜின்னா.

     கவிஞர் இக்பால்

      பாகிஸ்தானின் ஞானத் தந்தை

     சாரே  ஜஹான்ஸே அச்சா என்னும் புகழ் பெற்றப் பாடலை இயற்றிய கவிஞர் இக்பால், ஜின்னாவை, தனி நாடு காண அழைத்துப் பார்த்தார்.

     உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? ஹிந்துஸ்தான் என் தாய் நாடு. இதனை விட்டு வெளியேற மாட்டேன் என உறுதியாய் மறுத்தவர் ஜின்னா.

     1920 இல் அலிகார் பல்கலைக் கழகம், அலிகார் இஸ்லாமியப் பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்பட்டபோது, அதனை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் ஜின்னா.

     மதத்தின் பெயரால் பல்கலைக் கழகமா? கூடவே கூடாது எனக் கண்டித்தவர் ஜின்னா.

     ஜின்னாவின் மனைவி பார்ஸி இனத்தைச் சார்ந்தவர்

     ஜின்னாவின் காரோட்டி ஒரு கிறித்தவர்

     ஜின்னாவின் பாதுகாவலர் ஒரு கூர்கா

     ஜின்னாவின் சுருக்கெழுத்தாளர் ஒரு பிராமணர்

     ஜின்னா தொடங்கி நடத்திய, டான் பத்திரிக்கையின் ஆசிரியர், ஒரு கிறித்தவர்.

     ஜின்னா இப்படித்தான் இருந்தார்

     ஜின்னா மதம் கடந்தவர்

     ஜின்னா மழைக்குக் கூட, மசூதியின் பக்கம் ஒதுங்கியவர் அல்ல

     இஸ்லாத்தின் மத நம்பிக்கைகளுள் ஒன்றான, இறை நம்பிக்கை, இவரிடத்து இல்லவே இல்லை.

     ஐந்து வேளை தொழுகையை அறியாதவர்

     நோன்பு இல்லாதவர்

     வசதி படைத்தவருக்கு, ஐந்தாவது கடமையாக கூறப்பட்டுள்ள, மெக்கா பயணம் செல்லாதவர்.

     இஸ்லாமிய மொழியான அரபி மொழி அறியாதவர்

     உருதுவில் பேசவோ, எழுதவோ தெரியாதவர்

     இஸ்லாத்தால் தடுக்கப்பட்ட, பன்றிக் கறியையும், விஸ்கியையும் விரும்பிக் சுவைப்பவர்.

     இவர்தான் ஜின்னா

     இப்படிப்பட்டவர்தான் ஜின்னா

     காந்தியடிகள் அனைத்து மதங்களும் சமம், ஆனால் அரசாங்கம் மதம் சாராமல் இருக்க வேண்டும் என்று மென்மையாய் போதித்துக் கொண்டிருந்தபோது, அரசாங்கத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தமே கிடையாதுஎன உறுதியாய் மறுத்தவர் ஜின்னா.

     ஜின்னா

     இவர்தான் ஜின்னா

     1937 வரை ஜின்னா இப்படித்தான் இருந்தார்.

     தேசியவாதியாக இருந்தார்

     பின் மெல்ல, மெல்ல பிரிவினை வாதியானார்.

     இந்துககளின் உணவுப் பழக்கம்  வேறு

     அவர்கள் வணங்குகிற கடவுளுக்கு உருவம் இருக்கிறது

     பசு அவர்களுக்குத் தெய்வம்

     எங்களுக்கோ அது உணவு

     எனவே இஸ்லாமியர்களும், இந்துக்களும், இந்நாட்டில் சேர்ந்து வாழவே முடியாது என்றார்.

     இந்தியாவில் இரண்டு தேசியங்கள் இருக்கின்றன

     ஒன்று இந்து தேசியம்

     மற்றொன்று இஸ்லாம் தேசியம்

     இரண்டும் ஒன்றாக இருக்கவே முடியாது என்றார்.

     மெல்ல, மெல்ல மாறினார்.

     மகாத்மா காந்தி என்னும் மாபெரும் ஆளுமை, ஜின்னாவைப் பொறாமைப்பட வைத்தது.

      நேருவோ மாபெரும் தலைவராக வலம் வந்தார்.

     இதனை ஜின்னாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை

     காந்தியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும், வளர்ந்து நிற்கிற நேருவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்ற எதிர்மறை எண்ணம், ஜின்னாவின் மனதில் ஆழ வேரூன்றியது.

     முழுவதுமாய் மாறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு பொதுக் கூட்ட மேடையில், மகாத்மா காந்தியை, மிஸ்டர் காந்தி என அழைத்தார்.

     அலைகடலென குழுமியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தனர்

     மகாத்மா எனச் சொல்

     கட்டளையிட்டனர் மக்கள்

     மீண்டும் மிஸ்டர் காந்தி என்றார்

     கூட்டம் ஜின்னாவை மேற்கொண்டு பேசவிடாமல், மேடையை விட்டு வெளியேற்றியது.

     ஜின்னா, தன் எதிர் மறை எண்ணங்களுக்கு வடிகால் பாகிஸ்தான் என்று எண்ணினார்.

     பிரிவினைவாதியானார்

     ஆங்கிலேயர்களும் தூபம் போட்டனர்

     1857

     முதல் சுதந்திரப் போரின் போதே, ஆங்கிலேயர் விஷ விதையைத் தெளித்தனர்.

     இந்து முஸ்லிம் விரோதப் போக்கை வளர்த்தனர்.

     ஜின்னாவை மாற்ற மகாத்மா காந்தி எவ்வளவோ முயன்றார்.

     முடியவில்லை

    

1944 ஆம் ஆண்டு பெருமுயற்சி மேற்கொண்ட மூதறிஞர் ராஜாஜி, காந்தியையும், ஜின்னாவையும் நேருக்கு நேர் பேச வைத்தார்.

     ஒன்றல்ல, இரண்டல்ல

     1944 செப்டம்பர் 9 ஆம் தேதி முதல், 24 ஆம் தேதி வரை, 16 நாட்கள் தொடர்ந்து, காந்தி ஜின்னாவின் வீட்டிற்குச் சென்றார்.

     அசராமல் பேசினார்

     ஜின்னாவை திருப்திப்படுத்த, கடைசிவரை காந்தியால் முடியவில்லை.

     எல்லாவிதமான உறுதி மொழிகளையும் முன் வைத்தார்

     ஜின்னா அசைந்து கொடுக்கவில்லை

     மேடையில் முழங்கினீர்களே, 1925 இல் நீங்கள் சொன்னீர்களே, ஜின்னா, முதலிலும் தேசியவாதி, இரண்டாவதிலும் தேசியவாதி, மூன்றாவதிலும் தேசியவாதி என்று முழங்கினீர்களே, ஜின்னா, என்ன ஆயிற்று உங்களுக்கு என்றார்.

     அதெல்லாம் பழங்கதை

     இன்றைக்கு முடியாது

     இந்துக்கள் நீங்கள், இஸ்லாமியர்களை வெறுக்கிறீர்கள்

     எங்களால் உங்களோடு இருக்க முடியாது

     எங்களை விரோதப் போக்கோடு பார்க்கிறார்கள்,

     ஆகவே, எங்களால் உங்களோடு இருக்கவே முடியாது என  திடமாய் மறுத்தார்.

     இதுபோன்ற சூழ்நிலையில், 1946 ஆம் ஆணடு, காபினெட் கமிஷன்இந்தியாவிற்கு வந்தது.

     இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கப் போகிறோம்

     அதற்கானத் திட்டத்தைத் தயாரிக்க வந்துள்ளோம்

     இப்படித்தான் அறிவித்தார்கள்.

     திட்டத்தையும் வெளியிட்டார்கள்

1.   வலிமையான மைய அரசு இந்தியாவில் இருக்கும்
2.   இஸ்லாமியர் எங்கெங்க அதிகமாக இருக்கிறார்களோ, அங்கங்கு அவர்கள் தனி மாகாணங்களை அமைத்துக் கொள்ளலாம்.
3.   இந்துக்கள் எங்கெங்க அதிகமாக வாழ்கிறார்களோ, அங்கங்கே அவர்கள் தங்கள் மாகாணங்களை அமைத்துக் கொள்ளலாம்.

     கூடுதலாக ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார்கள்.

     எந்தவொரு பிரதேசமாவது, பிரிந்து செல்ல விரும்பினால், பிரிந்து செல்லலாம்.

     காங்கிரஸ் எதிர்த்தது.

     ஜின்னாவும் எதிர்த்தார்

      தான் விரும்பும் பாகிஸ்தான் என்ற பெயர் இதில் இல்லை என்பதற்காக ஜின்னா எதிர்த்தார்.

      மீண்டும் ராஜாஜி வந்தார்.

      பேசினார்

     ஜின்னா ஒப்புக் கொண்டார்

     காந்தி முடிவில் சரி என்றார்

     பட்டேல் மனதளவில் தயாரானார்

     நேரு ஒரு போதும் முடியாது என்றார்.

     காங்கிரஸ் நேருவின் பின் நின்றது.

     கொதித்தெழுந்த ஜின்னா, நேரடி நடவடிக்கையை அறிவித்தார்.

     வங்காளமும், பஞ்சாபும் பற்றி எரியத் தொடங்கியது.

     ஊரெங்கும் கலவரம்

     தீ வைப்பு

     பெண்களை மான பங்கம் செய்தல்

     சமூகச் சீரழிவு

     பிரிவினை தவிர்க்க முடியாததாகி விட்டது.

     இந்தியா பாகிஸ்தான் பிரிந்தது.

     ஒன்றரை கோடி மக்கள்

     உலகிலேயே அதிக மக்கள் புலம் பெயர்ந்த நிகழ்வு அரங்கேறியது

     ஒரே நாளில், இஸ்லாமியர் சீக்கியர், இஸ்லாமியர் இந்துக்கள் விரோதியானார்கள்.

     பாகிஸ்தானில் இருந்து துரத்தப்பட்ட இந்துக்களும், சீக்கியர்களும், இந்தியாவில் இருந்து புறப்பட்ட முஸ்லீம்களும், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினர்.

     இருவரும் சந்தித்த இடத்தில் இரத்த ஆறு ஓடியது

1947, ஆகஸ்ட் 14
பாகிஸ்தான் உதயமானது.

1919 ஆம் ஆண்டில் பிறந்த
ஜின்னாவின்  இளைய மகள்
டினாவின் பிறந்த நாள்
ஆகஸ்ட் 14.

------

     இந்தியப் பிரிவினைப் பற்றிப் பாடநூல்கள் வாயிலாக, ஒன்றிரண்டு செய்திகளையே அறிந்து வைத்திருந்த எனக்கு, இம்மனிதர் பேசப் பேச, கால இயந்திரத்தில் ஏறி, பின்னோக்கிப் பயணித்து, அக்கால நிகழ்வுகளை எல்லாம், கண்ணாரக் கண்ட உணர்வு.

இப்படியும் நடக்குமா,

நடந்திருக்கிறதே

இந்து, சீக்கிய, இஸ்லாமிய இரத்தங்கள் ஒன்றிணைந்து,
பேதங்கள் ஏதுமின்றி,
ஒற்றுமையாய் பெரு ஆறாய் ஓடியிருக்கிறதே.

மனம் பதைபதைத்துத்தான் போய்விட்டது.

ஆ.வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி
மேனாள் வணிகவியல் துறைத் தலைவர்


பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் அவர்கள்
பேசப் பேச,
அரங்கே அதிர்ச்சியில் உறைந்துபோய்தான் அமர்ந்திருந்தது.

வரலாற்று நிகழ்வுகளை
தமிழறிஞர்களையும் விஞ்சும் பேச்சு மொழியில்
எடுத்து வைத்தவர்
ஒரு வணிகவியல் பேராசிரியர்
என்பதைத்தான் நம்பவே முடியவில்லை.

இந்தியப் பிரிவினை

ஏடகம்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவு

     கடந்த 11.8.2019 ஞாயிறு மாலை நடைபெற்றப் பொழிவிற்கு வந்திருந்தோரை,

புரவலர் மற்றும் ஏடகம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர்
கரந்தை, சமணர் ஆலய அறங்காவலர் குழுத் தலைவர்


திரு ச.அப்பாண்டைராஜ் அவர்கள்
வரவேற்றார்.

தஞ்சாவூர், தில்லைத்தானம்


திரு அ.இராமகிருட்டினன் அவர்கள்
தலைமையுரையாற்றினார்.

கல்வியாளர் மற்றும் ஏடகப் புரவலர்


திரு எம்.வேம்பையன் அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

கும்பகோணம், வள்ளலார் பள்ளி ஆசிரியை


திருமதி எஸ்.காயத்ரி அவர்கள்
நிகழ்வுகளைத் திறம்பட தொகுத்து வழங்கினார்.

மகாத்மா காந்தி பிறந்த
150 ஆம் ஆண்டில்,
அரியதொரு பொழிவை அரங்கேற்றி,
எங்களையெல்லாம்
சுதந்திரப் போராட்டக் காலத்திற்கே
அழைத்துச் சென்ற
ஏடகம்
நிறுவுனர்
முனைவர் மணி.மாறன் அவர்களின்
முயற்சி  போற்றுதலுக்கு உரியது.

போற்றுவோம், வாழ்த்துவோம்.

நன்றி கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ

Post a Comment

3 Comments

  1. சொற்பொழிவின்சாரத்தை வரிவடிவமாக்கிய ஓர் அருமையான பதிவு. பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. அரிய வரலாறு அறிந்தேன் நன்றி
    -கில்லர்ஜி

    ReplyDelete