கோயில் யானை
ஆண்டு 1916.
நவம்பர் 22.
கடலின் நீர் மட்டம் மெல்ல, மெல்ல வெப்பம் கூடுகிறது
கடல் நீர் ஆவியாகி, பெரு மலையென மேலெழுகிறது.
மேலே மேலே சென்ற நீர், குளிர்ந்து மேகமாய் மாறுகிறது.
கடல் நீர் ஆவியானதால், காற்றின் வேகம் அதிகமாகி, ஒரு சுழற்சி ஏற்படுகிறது.
சுழற்சி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாய் மாறி, தன்னைச் சுற்றியிருக்கும் காற்றை வெகுவேகமாய் உள்ளிழுக்கிறது.
புயல் உருவாகிறது.
புயலின் கோரத் தாண்டவம் அரங்கேறிக் கொண்டிருக்கும் பொழுதே, இம்மனிதரின் எழுதுகோலைக் கடந்து, வெள்ளைத் தாளில் கரையேறுகிறது, இவர் கவிதை.
மனைவி
காற்ற டிக்குது கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே
தூற்றல் கதவு சாளர மெல்லாந்
தொளைத்த டிக்குது பள்ளியிலே
கணவன்
வானஞ்சி னந்தது, வையம் நடுங்குது
வாழி பராசக்தி காத்திடவே
தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி அருள் செய்ய வேண்டுகிறேன்
நேற்றிருந்தோம் அந்த வீட்டினலே இந்த
நேரம் இருந்தால் என் படுவோம்?
காற்றென வந்தது கூற்றம் இங்கே நம்மைக்
காத்தது தெய்வ வலிமையன்றோ?
புயல் ஓய்ந்த பிறகு, வீட்டை விட்டு வெளியே வந்து, புயலால் விளைந்த சேதத்தைப் பார்வையிடுகிறார்.
வெல்லச்சுச் செட்டியார் தோப்பு, புயலால் சேதமடையாமல் நிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்து, அங்கும் ஒரு பாடல் பாடுகிறார்.
வயலிடை யினிறே – செழுநீர்
மடுக் கரையினியே
அயலெவரு மில்லை – தனியே
ஆறுதல் கொள்ளவந்தேன்.
காற்ற டித்ததிலே – மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே – சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே.
சிறிய திட்டையிலே – உளதோர்
தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை – அதனை
வாயு பொடிக்கவில்லை.
வீழ்ந்தன சிலவாம் – மரங்கள்
மீந்தன பலவாம்
வாழ்ந்திருக்க வென்றே – அதனை
வாயு பொறுத்துவிட்டான்.
சமுதாய மக்களை மறந்து, அடித்தட்டு மக்களைத் தங்கள் பாடல்களில் துறந்து, பெருநிலக்கிழார்களிடமும், செல்வந்தர்களிடமும், புலவர்கள் அடைக்கலம் புகுந்திருந்த காலத்தில், வெகுண்டெழுந்து, சமூகத்தைத் தன் பாடலால், தூக்கி முன் நிறுத்தியவர் இவர்.
ஏழு வயதிலேயே கவியெழுதத் தொடங்கியவர்.
15 வயதில் திருமணம்
மனைவியின் வயதோ ஏழு.
அக்கால வழக்கத்திற்கு இவர் மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன?
நடந்தது திருமணம்
கணவனும் மனைவியும் பேசவேக் கூடாது
பொதுவெளியில் சேர்ந்து நடக்கவே கூடாது
கணவரைக் கண்டாலே, மனைவி ஓடி ஒளிய வேண்டும்
வீட்டிற்கு விருந்தினர் வந்துவிட்டாலோ, வெளியே தலை காட்டவேக் கூடாது.
இதுதான் அக்காலம்.
ஆனால், அக்காலத்திலேயே, இவர் மட்டும், நண்பர்கள், உற்றார், உறவினர் சூழ்ந்திருக்க, மனைவியை அழைப்பார்.
தேடக் கிடைக்காத சொர்ணமே, உயிர்ச்சித்திரமே
மடவன்னமே, அரோ சிக்குது பால் தயிரன்னமே,
மாரன் சிலைவேல்களை கொலைவேலென – விரி
மார்பிலே – நடுவ தொளை
செய்வது கண்டிலை யின்னமே – என்ன
செய்தேனோ நான் பழி முன்னமே?
என தலைகவிழ்ந்து, முகம் நாணி நிற்கும் மனைவியைப் பார்த்து இவர் பாடுவார்.
உற்றார், உறவினர் முன்னிலையில் இதுபோன்று, பாடலைப் பாட எவ்வளவு துணிச்சல் வேண்டும்.
அதுவும் அக்காலத்தில்.
இவருக்கு இருந்தது, அந்தத் துணிச்சல்.
ஒரு முறை, சென்னைக்கு வந்திருந்த காந்தியிடமே, இதே துணிச்சலோடு, நிமர்ந்த நெஞ்சேடு பேசியவர் அல்லவா இவர்.
1919 ஆம் ஆண்டு, ரௌலட் சட்ட எதிர்ப்பிற்கு, மக்களைத் தயார் படுத்த, மகாத்மா காந்தி அவர்கள் சென்னைக்கு வந்திருந்தார்.
ராஜாஜியின் மாளிகையில் தங்கியிருந்தார்.
மதியம் இரண்டு மணி இருக்கும்.
காந்தி வழக்கம் போல், திண்டு மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
மகாதேவ தேசாய், பாரிஸ்டர் ஆதி நாராயணச் செட்டியார், ஏ.ரெங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி, ராஜாஜி என அக்காலத்துப் பிரபலங்கள், காந்தியைச் சுற்றி, சற்று தொலைவில் நின்றவாறே, மும்முரமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
யாரையும் உள்ளே விடக் கூடாது என்ற உத்திரவை நிறைவேற்ற, வாயிலில் ஒருவர் நிற்கிறார்.
என்ன ஓய் எனக் கூறியவாறு, காவலாளியைச் சற்றும் பொருட்படுத்தாது, காவலைக் கடந்து சூறாவளி போல் நுழைந்து, காந்தி அமர்ந்திருந்த திண்டிலேயே, சம்மணமிட்டு அமர்கிறார் இவர்.
காந்தியைச் சுற்றிச் சூழ்ந்து நின்றவர்கள் எல்லாம், திகைப்போடு இவரைப் பார்க்கின்றனர்.
மிஸ்டர் காந்தி, இன்றைக்கு சாயங்காலம், ஐந்தரை மணிக்கு, நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள், தலைமை வகிக்க முடியுமா?
காந்தியும் திடுக்கிட்டுத்தான் போனார்.
இன்றைக்குத் தோதுபடாது. தங்களுடைய கூட்டத்தை, நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?
முடியாது. நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி, தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.
அவ்வளவுதான், சூறாவளியாய் நுழைந்தவர், புயல் வேகத்தில் வெளியேறிவிட்டார்.
காந்தி மெல்ல சுதாரித்துக் கொண்டு, அருகில் இருந்தவர்களிடம் கேட்டார்.
இவர் யார்?
பின் காந்தியே கூறினார்.
இவரை நாம் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.
எப்பேர்பட்ட கவிஞர் பார்த்தீர்களா?
சாதாரணக் கவியல்ல
ஏழு வயதிலேயே ஏடெடுத்துக் கவியெழுதத் தொடங்கியவர் அல்லவா?
சிறுவயதிலேயே, தன் கவி வலிமையால், பெரும் பெயரும் புகழும் பெற்றவர் அல்லவா.
இதனாலேயே, புலவர்கள் பலருக்கும், இவர் மீது ஒரு காழ்ப்புணர்ச்சி.
காந்திமதி நாதப் பிள்ளை என்றொரு புலவர்.
இவருக்கு, இந்தக் கவிச் சிறுவனைக் காண்டாலே பிடிக்காது.
ஒரு முறை, புலவர் பலர் கூடியிருந்த சபையில், இச்சிறுவனை அழைத்து, ஒரு ஈற்றடியைக் கொடுத்து, பாடுக வெண்பா என்றார்.
ஈற்றடி எனில், பாடலை முடிக்கும்போது, இவர் கூறிய வார்த்தையால் பாடலை நிறைவு செய்ய வேண்டும்.
அதிலும் வெண்பா எனில், மெத்தப் படித்தப் புலவர்களே, சற்றுக் கலங்கித்தான் போவார்கள்.
இவன் சிறுவன்.
அலட்சியப் பார்வைப் பார்த்து, ஈற்றடியைக் கூறினார்.
பாரதி சின்னப் பயல்.
அடுத்த நொடி. சிறுவனிடமிருந்து, சீறி வெளிப்பட்டது வெண்பா.
ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிழந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்போ லுளத்தான் காந்திமதி நாதனைப்
பார் அதி (பாரதி) சின்னப் பயல்.
சபையோர் சிரித்தனர்.
காந்திமதி நாதனோ கூனிக் குறுகிப்போனார்.
நண்பர்களே, வெண்பாவைப் படித்ததுமே, இச்சிறுவன் யார் என்று தெரிந்துவிட்டதல்லவா?
ஆம், மகாகவி பாரதிதான்.
வெண்பா பாடியவுடன், குழுமியிருந்தோர் நகைக்க, காந்திமதிநாதன் தலை குனிய, பாரதியோ இளகித்தான் போனார், உருகித்தான் போனார்.
சற்று முன், பாடிய வெண்பாவையே, சிறிது மாற்றி, மீண்டும் பாடினார்.
ஆண்டி லிளையவனென் றைய, அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற
காரதுபோ லுளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்.
ஐயா, என்ன இருந்தாலும் தாங்கள் எனக்கு வயதில் மூத்தவர், நான் உண்மையில் சின்னப் பையன்தானே? தங்கள் மனம் நோகும்படி செய்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
கூடியிருந்தோர் பாரதியின் பண்பு கண்டு மலைத்துப் போய்விட்டனர்.
மகாகவி பாரதியார்.
பாரதி எப்படி இறந்தார்?
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், யானையால் தாக்குண்டு இறந்து போனார்.
உண்மைதானே
இப்படித்தான் நானும் இதுநாள் வரை நம்பிக் கொண்டிருந்தேன்.
நான் படித்த பல புத்தகங்களிலும் இவ்வாறுதான் படித்ததாக நினைவு.
ஆனால் உண்மை என்ன?
யானை தாக்கியதால் பாரதி இறக்கவில்லை என அடித்துச் சொல்லுகிறார் இவர்.
மின்னல் தாக்கியதைப் போல் திகைத்துத்தான் போனேன்.
யானை தாக்கியதும் உண்மை
பாரதி இறந்ததும் உண்மை
ஆனால்
யானை எப்போது தாக்கியது?
பாரதி எப்போது இறந்தார்?
இந்த கால வித்தியாசத்தில்தான் புதைந்திருக்கிறது உண்மை.
பாரதி அமரத்துவம் அடைந்தது, செப்டம்பர் 11, ஆண்டு 1921
யானை எப்போது தாக்கியது?
முதலில் எப்படித் தாக்கியது என்பதைப் பார்ப்போம்.
பாரதியின் மகள் சகுந்தலா பாரதி அவர்களே கூறுகிறார் கேளுங்கள்.
காலை நேரத்தில் சில சமயம் என் தந்தை, பார்த்தசாரதி கோயிலுக்குப் போவார். அங்கு வாசல் மண்டபத்தில் கட்டியிருக்கும் யானைக்குப் பழம் வாங்கிக் கொடுப்பார். பின் அதனுடன் விளையாட்டாகச் சிறிது வார்த்தையாடிவிட்டு வருவது வழக்கம்.
சில நாளாகக் கோயில் பக்கம் போகாதிருந்த என் தந்தை, ஒரு நாள் வழக்கம்போல், யானைக்குப் பழம் கொடுக்கப் போனார்.
யானைக்கு மதம் பிடித்திருந்ததால், நான்கு கால்களுக்கும் சங்கிலி போட்டுக் கட்டப்பட்டிருந்தது.
ஜனங்கள் கம்பி வேலிக்குப் புறம்பே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
என் தந்தை உள்ளே சென்றபோது, அவரை யாரும் தடுக்கவில்லை போலும்.
வழக்கம் போல வாழைப் பழத்தை யானையின் அருகில் சென்று கொடுத்தார்.
துதிக்கையை நீட்டிப் பழத்தை வாங்கிய யானை, பின் அவரைத் துதிக்கையால் கீழே வீழ்த்திவிட்டது.
யானையின் நான்கு கால்களுக்கும் இடையில் விழுந்துவிட்டார்.
கீழே பாறாங்கல் பரவிய தரை.
என் தந்தை எழுந்திருக்கவில்லை.
முகத்தினின்றும் இரத்தம் பெருக்கெடுத்துவிட்டது.
யானை தன் நண்பனுக்குத் தீங்கிழைத்துவிட்டோமே என்ற பச்சாத்தாபத்துடன், தன் பிழையை உணர்ந்து போல, அசையாமல் நின்றுவிட்டது.
அது தன் காலை ஒரு முறை அசைந்திருக்குமானால், அத்துடன் பாரதியார் கதை முடிந்திருக்கும்.
சுற்றி நின்ற ஜனங்கள் திகைத்துவிட்டார்கள்.
உள்ளே நுழைந்து அவரைத் தூக்க ஒருவருக்கும் தைரியம் இல்லை.
அந்த வேளையில், எங்கிருந்தோ வந்தான் குவளைக் கிருஷ்ணன்.
தன் உயிரைத் திரணமாக மதித்து, உள்ளே குதித்து, என் தந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தான்.
பின்னர் கேட்க வேண்டுமா?
ஜனங்கள் அவரைத் தாங்கிய வண்ணம், கோயில் வாசல் மண்டபத்திற்ககுக் கொண்டு வந்தார்கள்.
எதிர் வீட்டில் குடியிருக்கும், சீனிவாசாச்சாரியாருக்கு விசயம் எட்டியது.
அவர் ஓடி வந்து, ஒரு வண்டியில் என் தந்தையைப் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்.
குவளைக் கிருஷ்ணனும் கூடவே போனான்.
சீனிவாசாச்சாரியார் பெண் ரெங்காள் என்பவள் எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தாள்.
சகுந்தா, அப்பாவை ஆணை அடிச்சுடுத்து என்று அழுதுகொண்டே கத்தினாள்.
கடவுளே, அந்த ஒரு நிமிசம், என் உள்ளம் இருந்த நிலையை எதற்கு ஒப்பிடுவேன்?
அப்பாவை ஆணை அடிச்சுடுத்து
ரெங்காவுடன் பார்த்தசாரதி கோயில் வாசலுக்கு ஓடினேன்.
அதற்குள் அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்விட்டார்கள்.
எந்த ஆஸ்பத்திரிக்கு என்று தெரியாது. என்ன செய்வது?
திருவல்லிக்கேணியில், விக்டோரியா ஹாஸ்டலில், என் தாயாரின் இளைய சகோதரர் வசித்து வந்தார், அவரைப் போய் அழைத்து வருவதற்காக விக்டோரியா ஹாஸ்டலுக்குப் போய் சேர்ந்தேன்.
அங்கு அவர் குடியிருந்த அறை எண் தெரியாது. ஒருவாறு தேடிக் கண்டுபிடித்து, அவரிடம் செய்தியைத் தெரிவித்தேன்.
ஜெனரல் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போயிருப்பார்கள் என நினைத்து அவர் அங்கு சென்றார்.
பின்பு, நான் வீடு திரும்பி வந்தபோது, என் தந்தையை வீட்டுக்குக் கொணர்ந்து விட்டிருந்தார்கள்.
மேல் உதட்டில் யானையின் தந்தம் குத்தியதால் ஏற்பட்ட காயம்.
தலையில் நல்ல பலமான அடி.
மண்டை சிதைவுற்று இருந்தது.
நல்ல காலமாக, அவரது பெரிய தலைப்பாகை இருந்தபடியால், தலை தப்பிற்று.
பார்த்தீர்களா, யானையால் தாக்கப்பட்ட அன்றே, மருத்துவமனைக்குச் சென்ற பாரதி, வீடு திரும்பி விட்டார்.
வீடு திரும்பிய பாரதி, பின்னாளில் ஒரு நாடகம் எழுதினார்.
நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா?
கோயில் யானை
ஆனால் இந்த முறை, துரதிருஷ்ட வசத்தால், இவன் நேரே தன் முகத்தைக் காட்டாமல், தலையைக் குனிந்து கொண்டு யானையிடம் சென்றான்.
அப்படிக்கு அது அதிகமாக ஒன்றும் செய்யவில்லை.
துதிக்கையால் இவனைத் தள்ளி வீழ்த்திவிட்டது.
கீழே ஒரு கல் மண்டையில் அடித்து ரத்தம் வெள்ளமாகப் பெருகிற்று.
யானை அதைக் கண்ட மாத்திரத்தில் திடுக்கிட்டுப் போய்விட்டது.
அப்போது நான் அந்த யானையின் முகத்தை உற்று நோக்கினேன்.
ஓரிரு சணங்கள் தன் துதிக்கையால், வஜ்ரியின் கால்களைத் துழாவிக் கொண்டிருந்தது.
இவன் பிரக்கிணையின்றிக் கீழே அதன் முன்பு வீழ்ந்து கிடக்கிறான்.
உம், உம் என்று ஒருவித உறுமுதல் இவன் வாயினின்றும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
யானை, தன் தந்தையுடைய, கடிகாரத்தை வீழ்த்தியுடைத்து விட்டுப் பின், பச்சாதாபமெய்தும் குழந்தை விழிப்பது போல, விழித்துக் கொண்டு நின்றது.
ஓரிரு ஷணங்களுக்கப்பால், நான் மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு வேலிக்குள் இறங்கி, இவனை வெளியே தூக்கி வந்தேன்.
வெளியே கொண்டு வந்து நிறுத்திய அளவிலே, இவனுக்குப் பிரக்கினை மீண்டு விட்டது.
இதுதான் நடந்த சங்கதி.
இளவரசன் ஒருவனை, காளிக் கோயில் யானை தள்ளிவிட்டதை, இளவரசனின் நண்பன், நேரிடையாகப் பார்த்துக் கூறியதாக, இந்நிகழ்வை, இந்நாடகம் பறை சாற்றுகின்றது.
இப்பொழுது புரிகிறதா? தன் கதையினையே, நாடகமாக எழுதியிருக்கிறார் என்பது தெளிவாகிறதா?
கோயில் யானை
பாரதியார் எழுதிய நாடகம், சுதேசமித்திரன் வருட அநுபந்தத்தில் வெளிவந்துள்ளதை, சுதேசமித்திரன் நாளிதழ் தெரிவிக்கிறது.
என்று வந்த சுதேசமித்திரன் இதழ் தெரியுமா?
8.1.1921 அன்று வெளிவந்த இதழ் தெரிவிக்கிறது.
ஆம்,. 1921 ஆம் ஆண்டு சனவரி மாதம் எட்டாம் தேதி.
பாரதி இறந்ததோ, 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி.
அதாவது பாரதி இறந்ததற்கு ஒன்பது மாதங்களுக்கு முன் வந்த, சுதேசமித்திரன் இதழ், பாரதியின் கோயில் யானை கதை ஏற்கனவே வெளிவந்து விட்டதாகத் தெரிவிக்கிறது.
அப்படியானால், அதற்கும் முன்பே, கோயில் யானை நாடகத்தை எழுதி இருக்க வேண்டும்.
அப்படியெனில், அதற்கும், அதற்கும் முன்பே கோயில் யானை பாரதியைத் தாக்கியிருக்க வேண்டும்.
எப்படிப் பார்த்தாலும், கோயில் யானையால், தாக்கப்பட்ட பிறகு, ஒரு வருடம் கழித்துத்தான் பாரதி இறந்திருக்கிறார்.
கோயில் யானை தாக்கியதற்கும், பாரதி இறந்ததற்கும் தொடர்பில்லை.
நண்பர்களே, திகைப்பாகத்தானே இருக்கிறது.
நானும் திகைத்துத்தான் போனேன்.
வெறும் 97 வருடங்களுக்கும்முன், ஒரு மாபெரும் மனிதருக்கு, மகாகவிக்கு ஏற்பட்ட ஒரு விபத்து, இப்படித் திரிந்து, மக்கள் மனதில் ஆழப் பதிய வைக்கப்பட்டிருப்பது வேதனை அல்லவா.
இதுகூடப் பரவாயில்லை, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த, இந்திய அளவிலான மாடர்ன் ரிவ்யூ என்னும் இதழின், நவம்பர் மாத வெளியீட்டில், திரு நரேந்திரதேவ் என்பவர், , எழுதியிருக்கும் செய்தியை, வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார், பாரதியின் தம்பி திரு சி.விசுவநாதன்.
Bharathi sacrificed his life to save a deadly frightened girl from the attack of a mad elephant. Who ran amuck on the street. The girl was saved by him. But he himself could not escape the rage of that mad beast, Who killed him on the spot.
---
பாரதி இலக்கியப் பயிலக இயக்குநர்
திரு வே.கோபாலன் அவர்கள்
பேசப் பேச, காட்சிகள் மனக் கண் முன்னே, திரைப்படம் போல், ஓட ஓட, கூடியிருந்தோர் தம்மையே மறந்துதான் அமர்ந்திருந்தார்கள்.
ஏடகம்
அமைப்பின்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவு.
கடந்த 9.12.2018 ஞாயிறு மாலை, மகாகவிக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வாக அரங்கேறியது.
பொழிவில் தோய வந்திருந்தோரை.
ஏடகம் அமைப்பின் நிறுவுநர், தலைவர்
திரு மணி.மாறன் அவர்கள்
வரவேற்றார்.
பாயும் ஒளி
என்னும் அற்புத இணைய இதழினை, மின் இதழினை,
கடல் கடந்தும் ஒளி வீசச் செய்துவரும், இதழின் ஆசிரியர்
திரு ஆர்.கண்ணன் அவர்கள்
விழாவிற்குத் தலைமையேற்றார்.
ஏடகம் அமைப்பின் பொறுப்பாளர்,
திரு உ.செந்தில்குமார் அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.
ஏடகச் செயலாளர்
பா.விஜி அவர்கள்
விழா நிகழ்வுகளைத் திறம்படத் தொகுத்து வழங்கினார்.
ஏடகப் பொழிவு
பாரதிப் பொழிவாகப் பொழிய
பெருமுயற்சி மேற்கொண்ட,
ஏடகம் அமைப்பின் நிறுவுநர்
திரு மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது
போற்றுவோம், வாழ்த்துவோம்.
0 Comments