வரலாற்று உலா : 25 பிப்ரவரி 2018

ஏடகம் அமைப்பின் சார்பாக 25 பிப்ரவரி 2018 அன்று வரலாற்று உலா சென்ற அனுபவத்தைப் பற்றி முனைவர் பா.ஜம்புலிங்கம் அவருடைய வலைப்பூவில் எழுதியுள்ளார். அதனைப் பகிர்வதில் ஏடகம் மகிழ்கிறது, அவருக்கு நன்றியுடன். 

தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட ஏடகம் அமைப்பின் நோக்கங்களில் ஒன்று பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் தமிழகக் கலையியலின் முக்கியத்துவத்தை உணர்த்தும்,  கட்டட மற்றும் சிற்பங்கள் சார்ந்த பண்பாட்டுப் பதிவுகளைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குவதும் ஆகும். அவற்றின் அடிப்படையில் ஏடகம் தன்னுடைய முதல் வரலாற்று உலாவினை அண்மையில் தொடங்கியது. நண்பர் திரு மணி.மாறன் அழைப்பின்பேரில் அவ்வுலாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

25 பிப்ரவரி 2018 காலை காலை சுமார் 6.00 மணிக்கு சுவடிப்பயிற்சி மாணவர்களும், உள்ளூர் பெருமக்களும் உள்ளடக்கிய 15 பேர் அடங்கிய குழுவினர் தஞ்சாவூர் மேலவீதியிலிருந்து இந்த உலாவில் கலந்துகொண்டனர். 

தாழமங்கை சௌந்தரமௌலீஸ்வரர் கோயில் (தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோயிலுக்கு முன்பாக சாலையின் மேற்புறம் உள்ளது) தஞ்சாவூரிலிருந்து வேனில் புறப்பட்டு செல்லும் வழியில் சக்கராப்பள்ளி சப்தமங்கைத்தலங்களில் ஒன்றான தாழமங்கை (சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை)  சௌந்தரமௌலீஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பசுபதிகோயிலுக்கு முன்பாக இக்கோயில் உள்ளது. கோயில் பூட்டியிருந்த படியால் உள்ளே செல்லமுடியவில்லை. தொடர்ந்து பயணித்தோம்.

புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் (தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டை அருகே செல்லும்போது வலப்புறமாகப் பிரியும் கண்டியூர் செல்லும் சாலையில் உள்ளது)  



அடுத்து காவிரியின் தென் கரையிலுள்ள, ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயிலுக்குச் சென்றோம். சூரியன் சற்று வெளியே வர கோயில் வளாகத்தின் கண்கொள்ளாக்காட்சியை ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம். இக்கோயில் முதற்பராந்தக சோழன் (கி.பி.907-955) காலத்தைச் சேர்ந்தது. கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதாகும். கருவறையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள மிக நுட்பமான சிற்பங்கள் கலையார்வலர்களால் போற்றப்படக்கூடியனவாகும். இதுவும் சக்கராப்பள்ளி சப்தஸ்தானக் கோயில்களில் ஒன்றாகும். பார்க்கப் பார்க்க ஆவலைத் தூண்டும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.  

பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில் (தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கில் 0.5 கிமீ தொலைவில் பிரிவு சாலையில் உள்ளது)
அங்கு சென்றபோது உடன் வந்த நண்பர் திரு தில்லை கோவிந்தராஜன் அருகே காளாபிடாரி சிலையைக் காணலாம் என்று கூறினார். அவருடைய ஆலோசனைப்படி அங்கிருந்து சாலையின் குறுக்கே சென்று பசுபதிகோயில் என்னும் சிற்றூரிலுள்ள பசுபதீஸ்வரர் கோயில் சென்றோம்.  கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்றான இக்கோயில் பிற்காலத்தில் காவிரியின் வெள்ளத்தாலும் மாலிக்காபூர், ஆற்காடு நவாப் போன்றோரின் படையெடுப்பின் காரணமாகவும் பேரழிவினைச் சந்தித்தது. வாசலில் இருந்து கோயிலைப் பார்த்துவிட்டு காளாபிடாரியைக் காணச் சென்றோம்.

காளாபிடாரி சிலை  (பசுபதீஸ்வரர் கோயிலின் எதிரே வயலில் 1 கிமீ நடந்து சென்றால் சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது) 

பசுபதீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் உள்ள வயல் வரப்புகளைக் கடந்து சுமார் 1 கிமீ அனைவரும் நடந்து சென்றோம். காலை உணவு உண்ணாத நிலையில் அவ்வாறாகச் செல்வது உடன் வந்தோருக்கு சற்றுச் சிரமமாக இருந்தபோதிலும் அனைவரும் ஒத்துழைத்தனர். சற்றே உயர்ந்த இடத்தில், மேடான பகுதியில் அந்த காளாபிடாரி சிலையைக் காணமுடிந்தது. புள்ளமங்கை கோயிலின் கல்வெட்டில் மதுராந்தக சோழன் காலத்திலும், ஆதித்த கரிகாலன் காலத்திலும் நடுவிற்சேரி ஸ்ரீகாளாபிடாரி என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சிலப்பதிகாரத்தில் உரகக்கச்சுடை முளைச்சி என்று குறிக்கப்படும் காட்சியை இந்த சிற்பத்தில் காணமுடிகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இத்தகு பெருமை வாய்ந்த அன்னையின் சிலையைப் பார்த்த அனைவரும் வியந்தனர். அழகான தேவியின் சிற்பத்தின் முகத்தில் தற்போது ஆங்காங்கே சில வேலைப்பாடுகளை தற்போது செய்ததுபோலக் காணமுடிந்தது. காளாபிடாரிக்கு சிறிய கோயில் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். அடுத்து அய்யம்பேட்டை சென்று காலை உணவினை முடித்துக்கொண்டு தாராசுரம் நோக்கிப் பயணித்தோம்.  

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் (தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருவலஞ்சுழியை அடுத்து, கும்பகோணத்திற்கு சற்று முன்பாக உள்ளது)




இரண்டாம் ராஜராஜனால் (கி.பி.1014-1044) கட்டப்பட்ட இக்கோயில், தஞ்சாவூர் பெரிய கோயிலையும், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலையும் நினைவுபடுத்தும். இந்த மூன்று கோயில்களும் கிட்டத்தட்ட ஒரே பாணியில் அமைந்தவையாகும். நந்தியின் அருகே உள்ள பலிபீடத்தில் காணப்படுகின்ற படிக்கட்டு பலவித இசையை எழுப்பும். தேர் வடிவில் அமைந்துள்ள ராஜகம்பீரன் மண்டபத்திலுள்ள சிற்பங்களும், பெரிய புராணக் கதையை விளக்கும் சிற்பங்களும் மிகவும் புகழ் பெற்றனவாகும். தஞ்சாவூர், கங்கைகொண்டசோழரம் கோயில்களோடு ஒப்பிடும்போது இது சற்றே சிறியதாக இருப்பினும் நுட்பமான, சிறிய சிற்பங்கள் இக்கோயிலின் சிறப்பாகும். கும்பகோணத்தில் என் பள்ளிக்காலம் முதல் நான் அடிக்கடி சென்றுவரும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். நாங்கள் ரசிப்பதைப் போல ஒரு வெளிநாட்டவர் கூர்ந்து ஆர்வமாக ரசித்து வருவதைப் புகைப்படமெடுத்தோம். நம் கோயிலின் கலையழகினை வெளிநாட்டவர் ரசிக்கும்போது நமக்குப் பெருமையாக இருக்கிறதல்லவா?

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயில் (அரியலூர் மாவட்டத்தில் உள்ளது)






தாராசுரத்திலிருந்து எங்கள் பயணம் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கித் தொடர்ந்தது. ஒரே நாளில் அடுத்தடுத்து ஒரே பாணியில் அமைந்த கோயிலைப் பார்க்கப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியை அனைவருடைய முகத்திலும் காணமுடிந்தது. முதலாம் ராஜேந்திரனால் (கி.பி.1012-1044) கட்டப்பட்ட இக்கோயில் தஞ்சாவூர் கோயிலுள்ளவாறே பெரிய துவாரபாலகர்களைக் கொண்டுள்ளது. கருவறையிலுள்ள மூலவர் மீது சூரிய ஒளி படும் வகையில் நந்தி அமைக்கப்பட்டுள்ளது. கருவறை எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக சந்திரகாந்தக்கல் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறுவர். கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அலைபேசிவழியாக நாங்கள் தொடர்புகொள்ள முயன்ற பொறியாளர் திரு கோமகன் அவர்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அங்குள்ள சிற்பங்களைப் பற்றிய அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களையும் சந்தித்தோம். கலையார்வலர்கள் சந்திக்கும்போது ஏற்படும் நெகிழ்ச்சியினை எங்களுக்குள் உணர்ந்தோம். 

இராசேந்திரசோழன் வரலாற்று அகழ்வைப்பகம் (கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் மிக அருகில் உள்ளது)
எம்பெருமான் தரிசனம் முடித்தபின்னர் அருகிலுள்ள இராசேந்திரசோழன் வரலாற்று அகழ்வைப்பகம் சென்றோம். அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது முழுக்க முழுக்க கோயில்களைப் பார்த்த நிலையிலிருந்து சற்றே மாற்றத்தை உணர்ந்தோம். அருமையான தொல்பொருள்கள், பல மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த அரிய சிற்பங்களைக் கண்டோம். என் பௌத்த ஆய்வு தொடர்பாக இங்கு பல முறை வந்துள்ள போதிலும், நண்பர்களோடு வருவது என்பதானது சற்றே வித்தியாசமாக இருந்தது. காட்சிப்பேழையில் இருந்த, நான் முன்னர் பார்த்த வலங்கைமானைச் சேர்ந்த  புத்தர் சிலையின் கீழ் கங்கைகொண்ட சோழபுரம் என்ற குறிப்பினைக் கண்டேன். இதனைப் பற்றி பிறிதொரு பதிவில் விரிவாகக் காண்போம்.   

மாளிகைமேடு (கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ளது)

அங்கிருந்த அருங்காட்சியக நண்பரிடம் மாளிகைமேட்டிற்குச் செல்வதற்கான வழியைக் கேட்டுக்கொண்டு மாளிகைமேடு சென்றோம். சோழ மன்னர்களால் ஆயிரமாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரண்மனை இருந்த இடத்தில் அக்கால கட்டட அமைப்புகளைக் கண்டோம். 1980 முதல் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் செங்கற்களால் கட்டப்பட்ட அரண்மனை சுவர்கள்,  இரும்பு ஆணிகள், தந்தத்திலான பொருள்கள், வண்ண வளையல்கள் உள்ளிட்ட பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இரட்டைக்கோயில் (அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கிலும், அரியலூரிலிருந்து 15 கிமீ தொலைவிலும் மேலப்பழுவூருக்கு சற்று முன்பாக உள்ளது).


மாளிகைமேட்டிலிருந்து இரட்டைக்கோயில் செல்லக்கோயில் செல்லத் திட்டமிட்டு அக்கோயிலை நோக்கிப் பயணித்தோம். செல்லும் வழியில் மதிய உணவினை உண்டோம். பயண அனுபவத்தை பேசிக்கொண்டே இரட்டைக்கோயில் சென்றுசேர்ந்தோம். சோழர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையரின் தலைநகரான பழுவூரின் ஒரு பகுதியான கீழையூரில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அவனிகந்தர்ப்பஈசுவரகிரக வளாகத்தில் இரு கோயில்கள் உள்ளன. வடபுறத்தில் உள்ள கோயில் சோழீச்சரம் என்றும் தென்புறத்தில் உள்ள கோயில் அகத்தீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முற்காலச் சோழர் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயில்கள் விளங்குகின்றன. காலையிலிருந்து பயணித்த நிலையில் இக்கோயிலின் திருச்சுற்றில் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். 

மேலப்பழுவூர்  மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் (அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கிலும், அரியலூரிலிருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது).

பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பாக மேலப்பழுவூரிலுள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். மேலப்பழுவூர் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மூலவரான லிங்கத்திருமேனியைச் சுற்றி வரும் வகையில் சிறிய வழி அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலிலும், காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ளதைப் போன்று இக்கோயிலில் இந்த அமைப்பு உள்ளது. இக்கோயிலின் நந்தி வித்தியாசமான கலையமைப்போடு இருந்ததைக் கண்டோம்.

காளாபிடாரி சிற்பத்தைத் தவிர மற்ற கோயில்களுக்கும், அருங்காட்சியகத்திற்கும் முன்னர் பல முறை சென்றுள்ளேன். இருந்தாலும் தற்போது ஒரே நாளில் அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களைப் பார்த்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, தொடர்ந்து பயணித்து நிறைவாக தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம். வேனை விட்டு இறங்கும் போதே அடுத்த பயணத்திற்கான திட்டமிடலையும், நாளையும் மனம் ஆவலோடு எதிர்பார்த்ததை உணர்ந்தேன். என் எதிர்பார்ப்பை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டு  விடை பெற்றேன். 

நன்றி
அருமையான வரலாற்று உலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற ஏடகம் அமைப்பிற்கும்,  பொறுப்பாளர்களுக்கும் என் சார்பாகவும், உடன் வந்தோர் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

துணை நின்றவை
அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004

Post a Comment

1 Comments